ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னை அடுத்துள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது ராட்சத கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியாகினர். 9 பேர் காயம் அடைந்தார்கள்.
இதுதொடர்பாக தென்னிந்தியத் திரைப்பட சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :
ஆங்கில படங்களுக்கு இணையாகப் படம் எடுப்பவர்கள் அதற்கு இணையாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்தியன் 2 படப் பிடிப்பு விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணா, மது இருவரும் பெப்சி உறுப்பினர்கள். உயிரிழந்த சந்திரன் தயாரிப்பு நிர்வாகி சங்க நிர்வாகியாகப் பல ஆண்டுகள் பணிபுரிந்ததுள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து நடந்த அதே ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் காலா, பிகில் படப்பிடிப்பில் தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.
திரைத்துறைகளுக்கான கிரேன்களை படப்பிடிப்புக்குப் பயன்படுத்தாமல் தொழிற்சாலைகளுக்கான பெரிய கிரேன்களை பயன்படுத்துகின்றனர். அதனை இயக்குவதற்காக அதற்கான ஆபரேடர்கள் உடனிருக்க வேண்டும். அத்தகைய கிரேன்களை திரைத்துறை தொழிலாளர்கள் இயக்குவது கடினம். இனிமேல் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஸ்டுடியோக்களில் மட்டுமே பெப்சி தொழிலாளர்கள் வேலை செய்வார்கள்.
பெப்சி தொழிலாளர்களுக்கு ஏற்கனவே பெப்சி சார்பில் காப்பீடு செய்யப்பட்டிருந்தாலும் படப்பிடிப்பு நடக்கும் ஸ்டுடியோக்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்தந்த ஸ்டுடியோக்கள் மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும். முக்கியமாகப் படப்பிடிப்பு நடக்கும் தளங்களில் ஆம்புலன்சுடன் கூடிய முதலுதவி சென்டர் அமைக்க வேண்டும்.