என்.பி.ஆரில் சில கேள்விகளைத் தவிர்க்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு வலியுறுத்தல்..

by எஸ். எம். கணபதி, Feb 22, 2020, 13:04 PM IST

தாய்மொழி, தந்தை, தாயார், துணைவர் பிறந்த இடம், பிறந்த தேதி விவரம், ஆதார், செல்லிடப்பேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிம எண் ஆகிய விவரங்கள், என்பிஆர் கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது :
சமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காகப் பாதகச் செயல்களை மனசாட்சியின்றி துணிந்து செய்யும் சில எதிர்க்கட்சிகளும் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயல்கின்றன. இதனை இஸ்லாமியர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக அரசுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பொய்ப் பிரசாரங்களைத் தூண்டிவிட்டு இஸ்லாமியச் சமூக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) திட்டமானது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி அஸ்ஸாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். அது நாடு முழுமைக்கும் உரியதல்ல. சிறுபான்மை சமுதாயத்தினர் குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிரானது இல்லை என மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. அஸ்ஸாம் தவிர இதர மாநிலங்களுக்கு மத்திய அரசால் வெளியிடப்படவில்லை.

தேசிய மக்கள் தொகை பதிவேடானது(என்பிஆர்) 2010ம் ஆண்டில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இந்தியாவில் ஆறு மாதங்களோ அல்லது அதற்கு மேலாக வசிக்கும் அனைத்து நபா்களின் விவரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி பதிவு செய்யப்படுகிறது.
தாய்மொழி, தந்தை, தாயார், துணைவர் பிறந்த இடம், பிறந்த தேதி விவரம், ஆதார், செல்லிடப்பேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிம எண் ஆகிய விவரங்கள் கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

எனவே, அனைவரும் ஒரு தாய் மக்களாக அமைதியாகவும் ஒற்றுமையாகவும் உழைத்து, வளமான வாழ்வை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் தோளோடு தோள் நின்று உழைப்போம். அதிமுக அரசுக்குக் களங்கம் ஏற்படுத்திக் குறுக்கு வழியில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்போரின் பொய்ப் பிரசாரங்களையும், விஷமச் செயல்களையும் புறந்தள்ளுவோம்.

தமிழகத்தில் எந்தவொரு சிறுபான்மையினருக்கும் எந்தவித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. இஸ்லாமியச் சமூகத்துக்கு அதிமுக என்றைக்கும் நண்பனாகவும், உற்ற தோழனாகவும் விளங்கும். சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும், விஷமப் பிரசாரங்களையும் செய்து சுயலாபம் அடையச் சதித் திட்டம் தீட்டிச் செயல்படுவோரிடம் கவனமாக இருந்து அமைதி காக்க வேண்டும்,
இவ்வாறு ஓ.பி.எஸ், இ.பி.எஸ். அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

You'r reading என்.பி.ஆரில் சில கேள்விகளைத் தவிர்க்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு வலியுறுத்தல்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை