இந்தியாவுக்கு நவீன ஆயுதங்கள்.. 3 பில்லியன் டாலர் ஒப்பந்தம்..

by எஸ். எம். கணபதி, Feb 25, 2020, 12:07 PM IST

இந்தியாவுக்கு 24 நவீன ஹெலிகாப்டர்கள் உள்பட ராணுவத் தளவாடங்கள் விற்பனை செய்வதற்கான 3 பில்லியன் டாலர் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப், அவரது கணவர் மற்றும் அந்நாட்டுக் குழுவினர் நேற்று(பிப். 24) காலை 11.35 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்குக் காத்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, விமானம் அருகே சென்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்றார். மெலனியாவுக்கு கைகுலுக்கி வரவேற்றார். டிரம்ப், விமானத்தில் இறங்கியது முதல் இருபுறமும் நடனக் கலைஞர்கள் வரிசையாக நின்று பாட்டுப் பாடி ஆடியபடி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் டிரம்ப் தம்பதிக்கு வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு, அவர்களை மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்திற்குப் பிரதமர் மோடி அழைத்துச் சென்றார். சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளின் ராட்டையை டிரம்ப் சுற்றி நூல் நூர்த்து பார்த்தார்.

அதன்பின், காந்தியடிகளின் பொருட்கள், அவரது புகைப்படங்கள் ஆகியவற்றையும் டிரம்ப்பும், மெலனியாவும் பார்த்து ரசித்தனர். அவர்களுக்குப் பிரதமர் மோடி, வரலாற்றுச் சிறப்புகளை விளக்கினார்.

இதையடுத்து, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலனியா, அவர்களது மகள் இவாங்கா உள்ளிட்டோர் நமஸ்தே டிரம்ப் நடைபெறும் மோட்டேரா ஸ்டேடியத்திற்கு சென்றனர். அங்கு டிரம்ப்பை வரவேற்று பிரதமர் மோடி பேசினார்.

இதைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் பேசியதாவது:
இந்தியாவின் பன்முகத்தன்மை, உயிரோட்டமான ஜனநாயகம், வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை உலகத்துக்கே வழிகாட்டுகின்றது. தனிநபர் சுதந்திரத்தை மதித்தல், சட்டத்தின் ஆட்சி, ஒவ்வொரு மனிதனின் கண்ணியத்தைக் காத்தல், இணக்கமாக வழிபடுதல் போன்ற பாரம்பரியங்களை இந்தியா கொண்டுள்ளது.
பாலிவுட் சினிமா உலகில் ஆண்டுக்கு 2 ஆயிரம் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தில்வாலே துல்கானியா லே ஜாயேங்கே, ஷோலே போன்ற படங்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்து ரசித்தனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களை இந்தியா கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி, ஒரு சாய்வாலாவாக, ஒரு டீ விற்பவராக வாழ்க்கையைத் தொடங்கி, இன்று இவ்வளவு உயரத்தை எட்டியிருக்கிறார். இந்தியாவில் யாரும் கடின உழைப்பால் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என்பதை இது காட்டுகிறது. அவர் இந்தியாவுக்காக இரவும், பகலும் உழைக்கிறார். இந்திய மக்களின் விருப்பமான, வெற்றிகரமான தலைவராகத் திகழ்கிறார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

பிரதமர் மோடியை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், அவர் கடுமையானவர் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இன்னும் 10 ஆண்டுகளில், இந்தியா முழுமையாக வறுமையை ஒழிக்கும்.

இந்தியாவுடன் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்கு எம்எச்-60ஆர் ரகத்தை சேர்ந்த நவீன வசதிகள் கொண்ட 24 ஹெலிகாப்டர்களையும், நவீனத் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களையும் அமெரிக்கா விற்பனை செய்ய உள்ளது. 3 பில்லியன் டாலர்(ரூ.21000 கோடி) அளவுக்குப் பாதுகாப்புத் துறையில் ஒப்பந்தம், நாளை(இன்று) கையெழுத்திட உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவுடன் ஒரு சிறந்த ஒப்பந்தம் செய்யத் தயாராகி வருகிறோம்.

தீவிரவாதிகளை ஒடுக்குவதில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. பாகிஸ்தானுடன் அமெரிக்கா நட்புறவு கொண்டு, பயங்கரவாதத்தை வேரறுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் செயல்பாடுகள், 100 சதவீதம் முறியடிக்கப்பட்டு விட்டது. அல் பாக்தாதி கொல்லப்பட்டு விட்டார்.
இவ்வாறு டிரம்ப் பேசினார்.

READ MORE ABOUT :

Leave a reply