ஜனநாயகத்தில் எதிர்ப்பு குரலை ஒடுக்க நினைக்கக் கூடாது. எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்று சொல்வது தவறு என சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் குப்தா கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் சங்கத்தில், ஜனநாயகமும், மாற்றுக் கருத்தும் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் குப்தா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
மக்கள் ஒன்று சேர்ந்து அமைதியாகப் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அரசாங்கம் செய்வது எல்லாமே சரியானது என்று சொல்லி விட முடியாது. அரசாங்கம் எப்போதும் சரியாகவே செய்யும் என்ற கருத்து தவறானது. எல்லோருமே தவறு செய்வதுண்டு.
ஒரு கட்சி 51 சதவீத வாக்குகளை பெற்று விட்டது என்பதற்காக, மீதி 49 சதவீத மக்களும் ஐந்து ஆண்டுகளுக்கு எதுவுமே பேசக் கூடாது என்று சொல்ல முடியாது. எதிர்ப்பு தெரிவிப்பதும், கேள்வி கேட்பதும்தான் ஜனநாயகத்தில் முக்கியமான அங்கம். எதிர்ப்புக் குரலை ஒடுக்க நினைக்கக் கூடாது.
ஆனால், இன்று நாட்டில் மாற்றுக் கருத்து உடையவர்களை தேசவிரோதிகள் என்று சித்தரிப்பது சகஜமாகி விட்டது. சில வழக்குகளைத் தேசவிரோத வழக்குகள் என்று கூறி, அவற்றில் ஆஜராகக் கூடாது என வக்கீல் சங்கங்களில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். அதுவே தவறானது. வழக்கறிஞர்கள் எல்லா வழக்குகளிலும் வாதாட வேண்டும். இலவச சட்ட உதவி அளிப்பது நமது கடமை. ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்துக்களை ஏற்க வேண்டும். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை மறந்து விடக் கூடாது. சுதந்திரமான பேச்சுரிமை இருந்தால்தான் அந்த நாடு சுதந்திரமான நாடாகக் கருதப்படும். பெரும்பான்மையின் ஆதிக்கம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.
இவ்வாறு நீதிபதி தீபக் குப்தா பேசினார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஸ்ரா, பிரதமரை வானாளவ புகழ்ந்ததற்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இப்படிப் பேசுபவர் எப்படி சுதந்திரமாக நீதி வழங்குவார் என்று கேள்விகள் எழுந்தன. இந்த சூழலில், நீதிபதி தீபக் மிஸ்ரா பேச்சு, அரசுக்கு எதிர்க்கருத்து கொண்டுள்ள அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.