நாடு முழுவதும் காலியாகவிருக்கும் 55 மாநிலங்களவை பதவியிடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் நிறைவடைகிறது. மகாராஷ்டிரா 7, ஒடிசா 4, தமிழ்நாடு 6, மேற்குவங்கம் 5 என ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதி முடிகிறது. இதே பால், ஆந்திரா 4, தெலங்கானா 2, அசாம் 3, பீகார் 5, சட்டீஸ்கர் 2, குஜராத் 4, ஹரியானா 2, இமாச்சல் 1, ஜார்கண்ட் 2, மத்தியப் பிரதேசம் 3, மணிப்பூர் 1, ராஜஸ்தான் 1 என்று ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 9ம் தேதியும், மேகாலயாவில் ஒரு எம்.பி.யின் பதவிக்காலம் ஏப்.12ம் தேதி முடிகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு வருமாறு:
17 மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 55 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக் காலம் 2020 ஏப்ரலில் முடிவடைகிறது. மார்ச் 6 ம் தேதி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படும். அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கி மார்ச் 13ல் முடிவடையும். வாக்குப்பதிவு மார்ச் 26 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அதே நாளில். மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திருச்சி சிவா (திமுக) மற்றும் அதிமுகவில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது.
தமிழக சட்டசபையில் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைப்பார்கள். இரு கட்சிகளிலும் இந்த பதவியைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.