டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கவர்னர் மற்றும் முதல்வருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும், அடுத்து வரவுள்ள என்.பி.ஆர், என்.ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் ஷாகீன்பாக் என்னும் இடத்தில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் குடும்பத்துடன் திரண்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்தும் முடங்கியே இருக்கிறது.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி ஞாயிறன்று, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே, டெல்லி தேர்தலில் தோல்வியுற்ற பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா என்பவர், போலீசார் இந்த போராட்டக்காரர்களை 3 நாட்களுக்குள் அகற்றாவிட்டால், நாங்கள் களத்தில் இறங்கி அகற்றுவோம் என்று கெடுவிதித்தார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் சிஏஏ ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து, போராட்டத்தைத் தொடங்கினார்.
அப்போது, சிஏஏ சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.
வன்முறை கும்பல் கல்வீசியதில் பலத்த காயம் அடைந்த போலீஸ் ஏட்டு ரத்தன்லால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். போலீஸ் துணை கமிஷனர் அமித் சர்மாவுக்குத் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த கலவரத்தில் காயமடைந்தனர். இன்று காலையிலும் பிரகாம்புரியில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இது வரை, கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பகல் 12 மணியளவில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். இதில், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக், டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, பாஜக தலைவர் மனோஜ் திவாரி, ராம்பீர்சிங் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர், முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், எல்லோருமே டெல்லியில் அமைதி திரும்ப வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.
காவல்துறையினர் இப்போது வேகமாக நடவடிக்கை எடுக்கிறார்கள். தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். போராட்டம் நடத்துவோர் அமைதி காக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, கூட்டத்திற்குச் செல்லும் முன்பாக கெஜ்ரிவால் கூறுகையில், காவல் துறையினர் பிரச்சினைகளைச் சந்திக்கும் போது அந்த சமயத்தில் முடிவெடுக்க முடியாமல் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார்கள். இது கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாதற்கு ஒரு காரணமாக உள்ளது. இதை உள்துறை அமைச்சரிடம் விளக்குவேன் என்று கூறியிருந்தார்.