தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து ரஜினிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே22ம் தேதி நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்தது. இந்த விசாரணை கமிஷன் தூத்துக்குடியில் விசாரணை நடத்தி வருகிறது.
சம்பவம் நடந்த சில நாட்களில் பாதிக்கப்பட்ட மக்களை நடிகர் ரஜினிகாந்த் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, காயமடைந்து மருத்துவமனையிலிருந்த ஒருவர் ரஜினியிடம், நீங்கள் யார்? என்று வேண்டுமென்றே கேட்டார். இதனால், ஒரு கணம் தடுமாறி விட்ட ரஜினி பின்னர் சென்னை திரும்பினார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாதாரண மக்கள் இல்லை. கலெக்டர் அலுவலகம், குடியிருப்பு எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சாமானிய மக்கள் கிடையாது. நிச்சயமாக விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி சம்பவம் குறித்து அவர் பேசியதால், அவரிடம் விசாரணை நடத்துவதற்காக விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது. தூத்துக்குடியில் நடைபெறும் விசாரணைக்கு ரஜினி இன்று ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகாமல் விலக்கு கேட்டு மனுத் தாக்கல் செய்தார். அவரது சார்பில் இளம்பாரதி உள்பட 3 வழக்கறிஞர்கள் ஆஜராகி, ரஜினி நேரில் ஆஜராக விலக்கு கேட்டனர். இதற்கு விசாரணை கமிஷன் அனுமதி வழங்கியது. மேலும், ரஜினிக்கான கேள்விகளை சீலிட்ட கவரில் அளிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை ஆணையத்தில் ஆஜராகிய வக்கீல் இளம்பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாததற்கு ஆணையத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அவருக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எழுத்துப் பூர்வமாக சீலிடப்பட்ட கவரில் வைத்து விசாரணை அதிகாரி கொடுத்துள்ளார்.
அந்த கேள்விகளுக்கான பதிலை ரஜினிகாந்த்திடம் பெற்று, அவரது விளக்கத்தை விசாரணை கமிஷனிடம் தாக்கல் செய்வோம்.
இவ்வாறு இளம்பாரதி தெரிவித்தார்.