டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பிறகு, கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார். அதைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் கட்சியில் குழப்பம் நீடித்தது. இதன்பின், புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை, மீண்டும் சோனியா காந்தியை இடைக்கால தலைவராக தேர்வு செய்தனர்.
எனினும், சோனியா காந்தி உடல்நிலை காரணமாக முழு நேரமும் செயல்பட முடியவில்லை. ராகுல்காந்தியும், பொதுச் செயலாளராக உள்ள பிரியங்கா காந்தியும்தான் கூட்டங்கள், போராட்டங்களில் பங்கேற்று வந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் கூட்டப்பட்டுள்ளது. அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. சோனியா காந்தி தலைமை வகிக்கும் இந்த கூட்டத்தில், மன்மோகன்சிங், ப.சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ராகுல்காந்தி வெளிநாடு சென்று விட்டதால், அவர் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கட்சியின் அடுத்த செயல்பாடுகள் குறித்தும், ராஜ்யசபா வேட்பாளர்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.