திவால் ஆகிறதா ஏர்செல் நிறுவனம்? - - வாடிக்கையாளர்கள் கடும் அவதி

திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளதாக ஊடங்கங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Mar 1, 2018, 09:48 AM IST

திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளதாக ஊடங்கங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 1999ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. சந்தையில் செல்போன் அறிமுகமாகும்போதே ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டதால், மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்துக்கு அதிக வரவேற்பு இருந்தது.

தொலைத்தொடர்பு சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏர்செல் நிறுவனமும் இடம் பெற்றது. கடந்த டிசம்பர் மாதம்வரை ஏர்செல் நிறுவனம் 8.5 கோடி வாடிக்கையாளர்களுடன் 6வது இடத்தில் இருந்தது.

ஆனால், மத்திய அரசு ஸ்பெக்ட்ராம் விலையைக் குறைத்ததும், அதிகமான நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறைகளில் வந்ததும் போட்டியை அதிகரித்தன. இதனால், சந்தையில் போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் திணறியது.

இந்நிலையில், ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைக் கட்டணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், சிக்னல் தடைபட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், ஏர்செல் நிறுவனத்தின் 9 ஆயிரம் டவர்களில் 7 ஆயிரம் டவர்களில் சிக்னல் நிறுத்தப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த புதன்கிழமை முதல் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் பிரச்சனை ஏற்பட்டது. இதனால், சில இடங்களில் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில், ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவையில் வியாழனன்று மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் தொடர்பு நிறுவனம் தங்கள் நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

ஏர்செல் நிறுவனத்துக்கு ஏறக்குறையரூ.15,500 கோடி கடன் இருப்பதால், அதைசெலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், தீர்ப்பாயத்தை அந்த நிறுவனம் அணுகி இருக்கிறதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வடமாநிலங்களில் 6 மண்டலங்களில் தனது சேவையை ஏர்செல் நிறுவனம் நிறுத்திக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

You'r reading திவால் ஆகிறதா ஏர்செல் நிறுவனம்? - - வாடிக்கையாளர்கள் கடும் அவதி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை