குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் வாங்க மாட்டார்கள்.. ரஜினிகாந்த் பேட்டி..

by எஸ். எம். கணபதி, Feb 27, 2020, 11:37 AM IST

எத்தனை போராட்டம் செய்தாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ஐதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு(பிப்.26) சென்னை திரும்பினார். அவர் வழக்கம் போல் தனது போயஸ்கார்டன் வீட்டு வாசலில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல் ஆளாக நான் குரல் கொடுப்பேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

டெல்லியில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கு உளவுத்துறையின் தோல்விதான் காரணம். இந்த விஷயத்தில் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்திருந்த நேரத்தில் இந்த வன்முறைகள் நடந்துள்ளன. உளவுத்துறை அவர்கள் பணியைச் சரியாகச் செய்யவில்லை. இரும்புக்கரம் கொண்டு அந்த வன்முறை போராட்டத்தை அடக்கியிருக்க வேண்டும். இனிமேலாவது அவர்கள் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வைத்து பலரும் அரசியல் செய்கிறார்கள். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். மதத்தையும், மதத்தினரையும் தூண்டுகோலாக வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். இது சரியான போக்கு அல்ல. மத்திய அரசு இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்படி அவர்கள் ஒடுக்கவில்லை என்று சொன்னால், எதிர்காலம் ரொம்ப கஷ்டம் ஆகிவிடும்.

என்ஆர்சியை அமல்படுத்தப் போவதில்லை என்று அவங்களே சொல்லிட்டாங்க. அதையே மறுபடியும் குழப்பிக் கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்? அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம். ஆனால் அதில் வன்முறை இருக்கக் கூடாது. அது என்னுடைய வேண்டுகோள்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் வழங்கி, அது சட்டமாகவும் வந்து விட்டது. இதைத் திரும்பப் பெற மாட்டார்கள் என்பது எனது கருத்து. அதனால் யார் என்ன போராட்டம் செய்தாலும், அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது என்னுடைய கருத்து.
இதைச் சொன்னால், நான் பா.ஜ.க.வின் ஊதுகுழல், பா.ஜ.க. என் பின்னால் இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். அதிலும் சில மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் அப்படிச் சொல்வது வேதனையாக இருக்கிறது. நான், எனது மனதில் பட்டதைச் சொல்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

You'r reading குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் வாங்க மாட்டார்கள்.. ரஜினிகாந்த் பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை