அமித்ஷா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி..

by எஸ். எம். கணபதி, Mar 3, 2020, 12:52 PM IST

டெல்லி கலவரங்களுக்குப் பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலகக் கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. டெல்லி கலவரங்களுக்கு மத்திய உள்துறையின் தோல்வியே காரணம் என்றும், இதற்குப் பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் கோரி, காங்கிரஸ், திரிணாமுல், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கின.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றம் அமைதியாகச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூட்டினார். அனைத்து கட்சி உறுப்பினர்களையும் அவையைச் சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு கொண்டார்.

இன்று காலை 11 மணிக்கு வழக்கம் போல் மாநிலங்களவை கூடியதும், அமித்ஷா பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கைக்கு அருகே வந்து அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இது போல் மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடிய போது, அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி பேனர்களைக் கையில் பிடித்தபடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனால், மீண்டும் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

You'r reading அமித்ஷா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை