காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தில் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், காங்கிரசுக்கு ஒரு இடமும், பாஜகவுக்கு ஒரு இடமும் எளிதாகக் கிடைக்கும். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், சுயேச்சைகள் ஆதரவில் காங்கிரசுக்கு 2வது இடம் கிடைக்கும்.
தற்போது 2வது இடத்தை கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. மேலும், கமல்நாத் அரசைக் கவிழ்க்கவும் திட்டமிட்டது.
இந்த சூழ்நிலையில், ம.பி. காங்கிரசில் முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவை பாஜக வளைத்து விட்டதாக நேற்று காலை செய்திகள் வெளியாயின. தொடர்ந்து, அவருடன் காங்கிரஸ் கட்சியின் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகவும், அவர்கள் கர்நாடகாவில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் நேற்றிரவு தகவல் வெளியானது.
இதையடுத்து, கமல்நாத் வீட்டில் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்பின், 20 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சர்களை கமல்நாத் நியமிப்பார் என்று கூறினர். இதில், சிந்தியாவுடன் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி தரப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், காங்கிரசின் நிலைமை கையை மீறிப் போய் விட்டது. இன்று(மார்ச்10) காலையில் ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர், ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், ஜோதிராதித்ய சிந்தியா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவர் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். இதற்கான ஒப்புதலைக் கட்சித் தலைவர் சோனியாகாந்தி அளித்துள்ளார் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, சிந்தியா விலகலா? நீக்கமா என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு புறம், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலையில், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயுள்ளது.