ரஜினியுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு ஏன்?

by எஸ். எம். கணபதி, Mar 10, 2020, 13:32 PM IST

நடிகர் ரஜினிகாந்த்தைக் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.



நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். கடந்த வாரம் அவர் தனது மன்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றும், கட்சித் தலைமையை மட்டுமே வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ரஜினி இப்படிச் செய்தால் வாக்குகள் கிடைப்பது கஷ்டம் என்று மன்ற நிர்வாகிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த்தைக் குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று சந்தித்துப் பேசினார். இன்று(மார்ச்10) காலையில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில், அவரை காங்கிரஸ் எம்பி., திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல், தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.

இந்த சந்திப்புக்குத் திருநாவுக்கரசர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
என் பேரனுக்கு ஒரு வயது ஆகிறது. அவனது பிறந்தநாள் சம்பந்தமாகப் பேசவே வந்தேன். நண்பர், சகோதரர் ரஜினிகாந்த் ஏற்கனவே என் மகன் திருமணத்திற்கு வந்திருக்கிறார். அதற்கு முன்பும் பல என் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார். அதனால், தற்போது பேரனுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து பெறுவதற்காக மகன், மருமகள், பேரனுடன் வந்து ரஜினியைச் சந்தித்தேன்.

ரஜினி என்னிடம் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை. ரஜினி யாரிடமும் அரசியல் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன். அவருக்கு நீண்ட காலமாக சினிமா, அரசியல் அனுபவம் இருக்கிறது. உங்களுக்கு(நிருபர்கள்) சொல்லும் அளவுக்கு விசேஷ தகவல் ஒன்றும் இந்த சந்திப்பில் கிடையாது. நானும் ஒரு பத்திரிகையாளன் என்ற அடிப்படையில் உங்களிடம் சந்திப்பைப் பற்றிச் சொல்கிறேன். அதே சமயம், பொதுவான விஷயங்கள், அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினோம்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா எம்.பி. சீட் ஜி.கே. வாசனுக்கு அளிக்கப்பட்டுள்ளதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, நான் மிகவும் நேசித்த தலைவர் மூப்பனார். அவர் மகன் வாசனுடனும் எனக்கு நல்ல தொடர்பு, நட்பு உள்ளது. அவருக்கு சீட் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. அவர் உள்படப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் 6 எம்.பி.க்களுக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

You'r reading ரஜினியுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு ஏன்? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை