மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 230 எம்.எல்.ஏ.க்களில் காங்கிரசுக்கு 113, பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். 4 சுயேச்சைகள், 2 பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள், ஒரு சமாஜ்வாடி உறுப்பினர் உள்பட 7 பேர் கமல்நாத் அரசுக்கு ஆதரவு அளித்து வந்தனர்.
வரும் 26ம் தேதி ம.பி.யில் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரசுக்கு ஒரு இடமும், பாஜகவுக்கு ஒரு இடமும் எளிதாகக் கிடைக்கும். 3வது இடத்தை கைப்பற்றவும், கமல்நாத் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு பாஜக ஆட்சி அமைக்கவும் அமித்ஷா வழக்கம் போல் ஸ்கெட்ச் போட்டார். சில மாதங்களுக்கு முன்பு இது பலிக்காவிட்டாலும், இந்த முறை சரியாக விக்கெட் விழுந்து விட்டது.
ம.பி. காங்கிரசில் முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவை பாஜக வளைத்தது. அவருடன் காங்கிரஸ் கட்சியின் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகவும், அவர்கள் கர்நாடகாவில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் நேற்றிரவு தகவல் வெளியானது.
இதையடுத்து, கமல்நாத் வீட்டில் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்பின், 20 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சர்களை கமல்நாத் நியமிப்பார் என்று கூறினர். இதில், சிந்தியாவுடன் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி தரப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், காங்கிரசின் நிலைமை கையை மீறிப் போய் விட்டது. இன்று(மார்ச்10) காலையில் ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர், ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, ம.பி. அமைச்சர்கள் 6 பேர் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பெங்களூருவில் உள்ள ரிசார்ட்டில் இன்று நிருபர்களைச் சந்தித்தனர். அவர்கள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தனர். அத்துடன், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறினர்.
இதையடுத்து, ம.பி. சட்டசபையில் காங்கிரஸ் பலம் 94 ஆக குறைகிறது. ஏற்கனவே 3 இடங்கள் காலியாக உள்ளன. இந்த 19 பேர் ராஜினாமாவை அடுத்து, மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 208 ஆகக் குறையும். இதில் 107 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பாஜக எளிதாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.