ஏழு மாதமாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும் அம்மாநிலம், காஷ்மீர், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநிலத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
முன்னாள் முதல்வர்கள் பரூக்அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட அரசியல் தலைவர்கள், காஷ்மீர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் அரசு இன்று(மார்ச்13) வெளியிட்ட அறிவிப்பில், பரூக் அப்துல்லா மீதான பாதுகாப்பு சட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து, 7 மாதங்களாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா விடுதலை செய்யப்படுகிறார்.