கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சார்க் நாடுகள் வீடியோ கான்பரன்சில் விவாதிக்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதைப் பாகிஸ்தான் தவிர மற்ற சார்க் நாடுகள் வரவேற்றிருந்தன. இன்று, பாகிஸ்தானும் அதில் பங்கேற்கத் தயார் என்று தெரிவித்துள்ளது.
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் முதன் முதலாகக் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. தற்போது, உலகம் முழுவதும் 124 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இது வரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று(மார்ச்13) தனது டிவிட்டர் பக்கத்தில் சார்க் நாடுகளுக்கு ஒரு அழைப்பு விடுத்திருந்தார். அதில், இன்று கொரோனா வைரஸ் நோய் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலக மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தெற்காசியாவில் வசிக்கிறார்கள். எனவே, சார்க் நாடுகளில் கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள், சிகிச்சை நடைமுறைகள் போன்றவை குறித்து நமக்குள் வீடியோ கான்பரன்ஸில் விவாதிக்கலாம். இதன்மூலம், உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.
இதற்கு நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு அதிபர் இப்ராகீம் கோலி, பூடான் பிரதமர் லோட்டாய் ஷெரிங், வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஷாரியர் ஆலம், ஆப்கன் அரசு செய்தி தொடர்பாளர் சேடிக் செட்டிக் ஆகியோர் வரவேற்பு டிவிட்டரில் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இதற்கு கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த பாகிஸ்தான் இன்று பதில் கூறியிருக்கிறது. அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளரின் டிவிட்டர் பக்கத்தில், கொரோனாவை ஒழிப்பதற்கு பிராந்திய அளவிலும், உலக அளவிலும் ஒருங்கிணைந்த பணிகள் அவசியமானது. சார்க் நாடுகளின் வீடியோ கான்பரன்சில் பிரதமரின் முதுநிலை உதவியாளர்(சுகாதாரம்) கலந்து கொள்வார் என்று கூறப்பட்டிருக்கிறது.