திண்டுக்கல்லில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்..

by எஸ். எம். கணபதி, Mar 14, 2020, 12:52 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.



தமிழகத்தில் தற்போது 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. தற்போது நீட் தேர்வு மூலமாக வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்த இடங்களில் சேர்ந்து விடுகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு புதிதாகத் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 ஊர்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து, இந்த மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுவதற்கு ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதற்காக தலா ரூ.100 கோடி நிதியும், நிலங்களையும் தமிழக அரசு ஒதுக்கியது. இப்போது கல்லூரிகளுக்கு முதல்வர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்குப் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு இன்று அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பூமி பூஜைகளும் நடைபெற்றன. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

You'r reading திண்டுக்கல்லில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.. Originally posted on The Subeditor Tamil

More Dindigul News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை