சார்க் நாடுகளுக்கு ஒரு கோடி டாலர் கொரோனா அவசர நிதி .. பிரதமர் மோடி அறிவிப்பு

by எஸ். எம். கணபதி, Mar 16, 2020, 10:12 AM IST

சார்க் நாடுகளுக்காக கொரோனா தடுப்பு அவசர நிதியை நாமே ஏற்படுத்த வேண்டும் என்றும், இதற்கு இந்தியா சார்பில் ஒரு கோடி டாலர் ஒதுக்குகிறேன் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 135 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் நோய் தாக்கி 3400 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 100ஐ தாண்டியது.

இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த 13ம் தேதியன்று தனது டிவிட்டர் பக்கத்தில் சார்க் நாடுகளுக்கு ஒரு அழைப்பு விடுத்திருந்தார். அதில், இன்று கொரோனா வைரஸ் நோய் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலக மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தெற்காசியாவில் வசிக்கிறார்கள். எனவே, சார்க் நாடுகளில் கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள், சிகிச்சை நடைமுறைகள் போன்றவை குறித்து நமக்குள் வீடியோ கான்பரன்ஸில் விவாதிக்கலாம். இதன்மூலம், உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதற்கு சார்க் நாடுகள் வரவேற்பு தெரிவித்தன.

இதையடுத்து, நேற்று(மார்ச்15) வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு அதிபர் இப்ராகீம் கோலி, பூடான் பிரதமர் லோட்டாய் ஷெரிங், வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஷாரியர் ஆலம், ஆப்கன் அரசு செய்தி தொடர்பாளர் சேடிக் செட்டிக், பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ஜாபர் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது, நமது மண்டலத்தில் 150 பேருக்கும் குறைவான பேருக்குத்தான் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. நாங்கள் வெளிநாடுகளில் இருந்து 1400 இந்தியர்களை திரும்ப அழைத்துள்ளோம். மேலும் பக்கத்து நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அவர்கள் நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறோம்.

நாம் இந்நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். மேலும் ஒரு அவசர நிதியை நாமே ஏற்படுத்தி, அதிக தேவை உள்ள நாடுகளின் பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ளலாம். இதற்கு இந்தியா சார்பில் ஒரு கோடி டாலர் ஒதுக்குகிறேன் என்றார்.

முன்னதாக, பாகிஸ்தான் அமைச்சர் ஜாபர்மிஸ்ரா பேசும் போது, ஜம்முகாஷ்மீரில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகத் தகவல் வருவதால், அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தேவையில்லாமல் காஷ்மீர் பிரச்சினையைக் கிளப்பினார். இதற்குப் பிரதமர் பதிலளிக்கவில்லை. எனினும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

You'r reading சார்க் நாடுகளுக்கு ஒரு கோடி டாலர் கொரோனா அவசர நிதி .. பிரதமர் மோடி அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை