பெங்களூரு ரிசார்ட்டில் உள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற திக்விஜயசிங், சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையில் பாஜக இறங்கியது.
காங்கிரசில் கமல்நாத்துடன் மோதிக் கொண்டிருந்த இளம்தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தனக்கு ஆதரவான 22 எம்.எல்.ஏ.க்களை அதிருப்தி எம்.எல்.ஏக்களாக ஆட்சிக்கு எதிராக மாற்றினார். அவர்களை பாஜகவினர் அழைத்துச் சென்று, பாஜக ஆளும் கர்நாடகாவில் உள்ள பெங்களூருவில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர்.
சிந்தியா திடீரென பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அடுத்து, காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுத்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை ம.பி. பாஜக தலைவர்கள் வாங்கிச் சென்று சபாநாயகர் பிரஜாபதியிடம் அளித்தனர்.
அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் அமைச்சர்களாக இருந்த 6 பேரை முதலமைச்சர் கமல்நாத் பதவிநீக்கம் செய்தார். இதையடுத்து, அந்த 6 பேரின் ராஜினாமாக்களை மட்டும் ஏற்று, எம்.எல்.ஏ. பதவியையும் சபாநாயகர் பிரஜாபதி பறித்தார். அதே சமயம், மற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சம்மன் அனுப்பினார். நீங்கள் விருப்பப்பட்டு ராஜினாமா செய்தீர்களா என்பதை நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். ஆனால், அந்த எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகாவில் இருந்து திரும்பவில்லை.
இந்த சூழலில், கமல்நாத் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாக பாஜக புகார் அளித்தது. இதனால், கமல்நாத் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால், சட்டசபையில் கவர்னர் உரை முடிந்ததும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் சபையைச் சபாநாயகர் ஒத்தி வைத்தார். கொரோனா வைரஸ் நோயைக் காரணம் காட்டி வரும் 26ம் தேதிக்குச் சட்டசபையை ஒத்தி வைத்தார். அன்றுதான் ராஜ்யசபா தேர்தலும் நடைபெறுகிறது.
இந்த குழப்பமான சூழலில், கமல்நாத் அரசு உடனடியாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி, முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் உள்பட 10 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனு இன்று விசாரிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய சிங் இன்று காலையில் பெங்களூருவுக்கு வந்தார். அவர் மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சேர்ந்து, பெங்களூரு ரிசார்ட்டிற்கு செல்ல முயன்றனர். ஆனால், கர்நாடக போலீசார், அவர்களைத் தடுத்தனர். ம.பி.யில் இருந்து வந்து ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறின தடுத்தனர்.
உடனே, திக்விஜய சிங் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அம்ருதாஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, திக்விஜயசிங் கூறுகையில், நான் ம.பி.யில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறேன். வேட்பாளரான நான் எனது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை சந்தித்து வாக்கு கேட்க போலீசார் அனுமதிக்கவில்லை. எங்கள் எம்.எல்.ஏ.க்கள் கடத்தி வரப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினர் எங்களுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கின்றனர். அந்த எம்.எல்.ஏ.க்களும் என்னுடன் பேசவிரும்புகிறார்கள். ஆனால், அவர்களின் செல்போன்களை பறித்து வைத்திருக்கிறார்கள். இது சட்டவிரோதமானது என்று கூறினார்.