கேரளாவில் கொரோனா நோயால் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் ஆன்லைனில் மது விற்க உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், மக்கள் அதிகமாகக் கூட்டம் சேராத வகையில் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதற்கிடையே, ஆலுவா மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிஷ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், கொரோனா வைரஸ் பரவி வருவதால், பொது வெளியில் செல்லாமல் தவிர்க்க வேண்டியுள்ளது. எனவே, கேரள அரசு மதுபானக் கழகத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யக் கோரினேன். அதற்கு பதில் வரவில்லை. எனவே, ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்வதற்குக் கேரள மதுபானக் கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், மாநிலம் முழுவதும் மக்கள், கொரோனா பாதிப்பால் பயத்தில் இருக்கிறார்கள். நாங்களும் நீதிமன்றத்தில் அதிக வழக்குகளை விசாரிக்க முடியாமல் முக்கிய வழக்குகளை மட்டும் விசாரித்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் இப்படியொரு மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்திருக்கிறார் இந்த மனுதாரர். எனவே, அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அவர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.