அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக அங்கிருந்த ராமர்சிலையை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.
சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இன்று(மார்ச்25) காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்திருக்கிறது. நோயால் 11 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மக்கள் கூட்டமாக சேரவேக் கூடாது என்று பிரதமர் மோடி கடந்த வாரமே கூறியிருந்தார். ஆனாலும், பாஜக கட்சியினருக்கு மட்டும் இதெல்லாம் பொருந்தாது போலும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கடத்தியது முதல் கமல்நாத் ஆட்சியை கவிழ்த்து, சிவராஜ்சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி அமையும் வரை எல்லா நிகழ்வுகளிலும் கூட்டம்,கூட்டமாகவே பங்கேற்றனர்.
தற்போது, பிரதமர் மோடி உத்தரவின்படி நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக அந்த இடத்தில் ஏற்கனவே மக்கள் வழிபட்டு வந்த குழந்தை உருவிலான ராமர் சிலையை இன்று வேறு இடத்திற்கு மாற்றினர்.உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்த சிலையை எடுத்து சென்று, ராமஜென்ம பூமி வளாகத்திலேயே வேறொரு இடத்தில் வைத்தார். முன்னதாக, அந்த ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ராமர் கோயில் கட்டப்பட்டு முடிந்ததும், இந்த ராமர் சிலை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும்.