கொரோனா தடுப்பு பணி ஆய்வு.. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமூக இடைவெளி..

by எஸ். எம். கணபதி, Mar 25, 2020, 12:28 PM IST

டெல்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூடி, கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு நிலைமை குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளது.


சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இன்று(மார்ச்25) காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்திருக்கிறது. நோயால் 11 பேர் பலியாகியுள்ளனர்.

பிரதமர் மோடி நேற்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அவர் அறிவித்தார். அவரது உத்தரவின்படி நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், டெல்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூடி, கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு நிலைமை குறித்தும் ஆலோசனை நடத்தியது. பிரதமர் மோடி இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார். ஊரடங்கின் போது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை நிவர்த்தி செய்வது குறித்தும், கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.முன்னதாக, கூட்டத்தில் அமைச்சர்கள் யாரும் நெருக்கமாக அமர்ந்து விடாமல், நாற்காலிகள் தள்ளி தள்ளி போடப்பட்டன. இதையடுத்து, அமைச்சர்கள் சமூக இடைவெளியை(சோஷியல் டிஸ்டன்ஸ்) கடைபிடித்தனர்.


Leave a reply