கொரோனா பாதிப்பால் மதுரையில் இறந்தவரின் வெளிநாட்டுத் தொடர்புகள்..

by எஸ். எம். கணபதி, Mar 25, 2020, 12:51 PM IST

கொரோனா பாதிப்பால் மதுரையில் உயிரிழந்தவரின் வெளிநாட்டு தொடர்புகள் மறைக்கப்பட்டது தற்போது தெரிய வந்திருக்கிறது.


சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இன்று(மார்ச்25) காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இது வரை 18 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 வயதுடைய ஒருவர் நேற்று உயிரிழந்திருக்கிறார். இவருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இவர் சமீபத்தில் வெளிநாட்டுக்கு செல்லவில்லை என்றும் வெளிநாட்டு தொடர்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது. அப்படியானால், கொரோனா எந்த வெளிநாட்டு தொடர்பும் இல்லாதவர்களுக்கும் பரவத் தொடங்கி விட்டதா, அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமோ என்ற அச்சம் தமிழக அரசுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டது.அதே சமயம், அந்த நோயாளிக்கு ஏற்கனவே நீரழிவு, சுவாசக் கோளாறு ஆகிய பிரச்சனைகள் இருந்திருக்கிறது. அதனால்தான் அவருக்கு சிகிச்சை பலன் தரவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிலையில், உயிரிழந்தவருக்கு வெளிநாட்டு தொடர்புகள் இருந்தது இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மதுரையைச் சேர்ந்த இவருக்கு 2 மனைவிகள் உள்பட பெரிய குடும்பம் இருக்கிறது. நிலம், வீடு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், மதப்பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வாராம்.தாய்லாந்து நாட்டிலிருந்து வந்து ஈரோட்டில் தங்கியிருந்த சிலரை இவர் கடந்த வாரம் சந்தித்திருக்கிறார். மேலும், மசூதிகளுக்கு இவர் சென்ற சமயத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

தமிழக அரசு அதிகாரிகளின் தீவிர விசாரணைக்கு பின்பு இந்த தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஈரோட்டில் தங்கியிருந்த தாய்லாந்து குழுவினர் அனைவருமே தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் இருவருக்குத் தொற்று இருப்பதாக அறியப்பட்டது.மேலும், மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Leave a reply