மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ரூ.50 லட்சம் மருத்துவக் காப்பீடு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..

by எஸ். எம். கணபதி, Mar 26, 2020, 15:00 PM IST

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா ரூ.50 லட்சத்திற்கு 3 மாதங்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இந்தியாவில் 21 நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு பொருளாதார உதவிகள் அளிப்பது குறித்து, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா ரூ.50 லட்சத்திற்கு 3 மாதங்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்யப்படும்.நாட்டில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும். இதற்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை பெண்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.1000 இரண்டு தவணைகளாக வழங்கப்படும். ஜன்தன் யோஜனா கீழ் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு தலா ரூ.500 வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Leave a reply