டெல்லி ஆனந்த்விகார் பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவில் குவிந்தனர். பெருங்கூட்டம் திரள்வதற்கு யார் காரணம் என்று பாஜகவும், ஆம்ஆத்மியும் டிவிட்டரில் மோதிக் கொண்டன.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்த சூழலில், ஏப்.14ம் தேதி வரை 21 நாள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ரயில்கள், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழில், ஓட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல், உணவு மற்றும் தங்கும் இடமும் இல்லாமல் சாலைகளில் தவிக்கின்றனர்.
ஆனால், இது டெல்லியில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில், உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசின் முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லியில் உள்ள உ.பி. தொழிலாளர்களுக்காக 1000 பஸ்கள் ஏற்பாடு செய்வதாக அறிவித்தார். இதே போல், டெல்லி ஆம் ஆத்மி அரசின் முதல்வர் கெஜ்ரிவால், டெல்லிக்குள் டி.டி.சி பஸ்களை இயக்குவதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, நேற்று(மார்ச்28) டெல்லியை அடுத்த காசியாபாத்தில் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் திரண்டனர். அதே போல், நேற்றிரவு டெல்லி ஆனந்த் விகார் பஸ் நிலையத்தில் பல ஆயிரம் தொழிலாளர் திரண்டனர். அவர்கள் பஸ்கள் கிடைக்காமல் தவித்தனர். சமூக விலகல்(சோஷியல் டிஸ்டன்ஸ்) என்ற பெயரில் ஒவ்வொரு மனிதனும் 2 அடி இடைவெளியில் இருப்பதே கொரோனாவைத் தடுக்கும் ஒரே வழி என்று அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், தலைநகர் டெல்லியிலேயே வழக்கத்தை விட அதிகமான கூட்டம் கூடியிருக்கிறது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு சரியான முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்றும் உ.பி. மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் சரியில்லை என்றும் ஆம் ஆத்மி தலைவர் மனோஜ் திவாரி நேற்று குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலடியாக, பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழ்நாட்டிலிருந்து பெங்களூரு 36 கி.மீ. தூரத்தில்தான் இருக்கிறது. சென்னையிலிருந்து 100 கி.மீ. தூரத்தில்தான் ஆந்திரா உள்ளது. அந்த மாநிலங்களில் இருந்ததெல்லாம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெளியேறவில்லையே? அதனால் டெல்லியில் ஆம் ஆத்மி அரசில்தான் கோளாறு உள்ளது என்று கடுமையாகச் சாடினார்.
இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசு பெரிய அளவில் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று தொலைக்காட்சியில் ராமாயணம் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.