தமிழகத்திற்கு சிறப்புநிதி ரூ.9 ஆயிரம் கோடி.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

tamilnadu seeks Rs.9000 crores as special assistance for contain covid19.

by எஸ். எம். கணபதி, Mar 29, 2020, 10:06 AM IST

தமிழகத்துக்குச் சிறப்பு பங்களிப்பு நிதியாக ரூ.9 ஆயிரம் கோடியை வழங்க வேண்டுமென்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவைத் தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்தி வருகிறோம். வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைப் பரிசோதனை செய்தல், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமூக தொற்றாக மாறிவிடாதபடி அரசு கண்காணித்து வருகிறது.இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்த நிவாரண உதவிகள், வங்கி வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரடங்கு உத்தரவைக் கண்டிப்பாக அமல்படுத்தும் அதே நேரத்தில் ஏழை, எளியவர்களுக்கான நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதும் அவசியமாகிறது. மக்களுக்கு மேலும் சில நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன. சுகாதாரத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு அதிக நிதி தேவைப்படக்கூடும்.பல்வேறு பிரிவினருக்கும் அவர்களின் தொழில் வளர்ச்சியை மீண்டும் எட்ட உதவி செய்வதோடு, பொருளாதார மேம்பாட்டைப் புதுப்பிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. இந்திய நிதி பரிவர்த்தனை முறைகளின்படி, ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு மட்டுமே கடன் பெற்றுக்கொள்ள வழிவகை உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவினால் பொருளாதாரத்தில் இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்கம் இருக்கும்.

இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்காக வழக்கத்தில் இல்லாத முறையைப் பின்பற்ற வேண்டியது உள்ளது. வழக்கமாக உள்ள பொருளாதார கொள்கை, கோட்பாடுகளையெல்லாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் நமக்கு எழுந்து உள்ளது.

எனவே இந்த சூழ்நிலையில் மாநில அரசுகள் கூடுதலாகக் கடன் பெறுவதை அனுமதிப்பதோடு, மாநில அரசுகளுக்குச் சிறப்பு மானியமாகக் குறைந்தபட்சம் ஒரு லட்சம் கோடி ரூபாயை அனுமதிக்க வேண்டும். மத்திய அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) மாநில அரசு அளித்துள்ள பங்களிப்புக்கு ஏற்ற விகிதத்தில் மாநில அரசுகளுக்கு நிதிப்பகிர்வை வழங்கலாம். அந்த வகையில் தமிழகத்துக்குச் சிறப்பு பங்களிப்பு நிதியாக ரூ.9 ஆயிரம் கோடியை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த கோரிக்கையைப் பரிசீலித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading தமிழகத்திற்கு சிறப்புநிதி ரூ.9 ஆயிரம் கோடி.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை