தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் இன்று முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், மருந்து மற்றும் காய்கறி, மளிகைக் கடைகள் எந்நேரமும் திறந்திருக்க நேற்று வரை அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று(மார்ச்29) முதல் அந்தக் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இதன்படி, சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களிலிருந்து பொருள்களை ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் வந்து பொருள்களை இறக்கி விட வேண்டும். வாகனங்களுக்குக் கிருமி நாசினி தெளித்தல், சுமை தூக்கும் பணியாளர்களுக்கு முறையாகப் பாதுகாப்பு போன்றவை பின்பற்றப்பட வேண்டும்.கோயம்பேடு மார்க்கெட் மட்டுமின்றி, காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். எனவே, பிற்பகலுக்கு மேல் மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவது கட்டுப்படுத்தப்படும்.
மேலும், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். ஆனாலும், அரசு வாகனங்கள், 108 அவசர ஊர்திகள் போன்ற ஊர்திகளுக்கான பிரத்யோக பெட்ரோல் நிலையங்கள் நாள் முழுவதும் செயல்படும்.
மருந்துக் கடைகள், உணவகங்கள்(பார்சல் மட்டும் தரலாம்) ஆகியவை எப்போதும் போல் திறந்திருக்கும். சுகி, சோமட்டோ, உபோ் போன்ற நிறுவனங்களின் மூலம் உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை சிற்றுண்டியும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்துச் சென்று வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. உணவு கொண்டு செல்லும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் மூலமாகக் காவல் துறையிடம் அடையாள அட்டை பெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.