கொரோனா ஊரடங்கால் பாதித்துள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 22 லட்சத்து 88 ஆயிரம் மக்களுக்கு உணவு, தங்குமிடம் அளித்து வருகிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி, லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேலை பார்த்து வந்த பிற மாநில கூலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உணவு, தங்கும் இடம் இல்லாமல் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர். ஆனாலும், போக்குவரத்து வசதி இல்லாததால், நூறு கி.மீ. தூரம் வரை நடந்தே செல்கின்றனர். இந்த காட்சிகள் கடந்த சில நாட்களாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதையடுத்து, வெளிமாநிலத் தொழிலாளர் மற்றும் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு உணவு, தங்குமிடம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு யாரும் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் என 22 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு உணவு, தங்குமிடம் அளித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.