கொரோனா பாதித்தவர்களுக்கு அறிவாலயத்தில் தனிமை வார்டு.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Dmk gives kalaignar arangam in Arivalayam premises to covid19 patients,

by எஸ். எம். கணபதி, Mar 31, 2020, 14:14 PM IST

கொரோனா பாதித்தவர்களைத் தனிமைப்படுத்தி வைப்பதற்கு, அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


உலகம் முழுவதும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் இது வரை 74 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவும் பல்வேறு விதங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை அளிப்பார்கள் என்று முதன்முதலில் ஸ்டாலின் அறிவித்தார். அதன்பிறகு மற்ற கட்சிகளும் இதே போல் அறிவித்தன.


மேலும், திமுக அறக்கட்டளை சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. திமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 கோடி வரை வழங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான அண்ணா அறிவாலயத்தின் வளாகத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு அரசு சார்பில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திமுக அறக்கட்டளையின் தலைவரும், மேலாண்மை அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தைச் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியனும், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபுவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஜி.பிரகாஷிடம் நேரில் சந்தித்து அளித்தனர்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கொரோனா பாதித்தவர்களுக்கு அறிவாலயத்தில் தனிமை வார்டு.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை