நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 7 இந்தோனேசியர்கள் மற்றும் கேரளா, கொல்கத்தாவைச் சேர்ந்த 2 பேர், உத்தரப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா பரவியிருக்கிறது.
இந்நிலையில், டெல்லியில் நடந்த முஸ்லிம் மாநாட்டின் மூலம் பலருக்கு கொரோனா பரவியது கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 22ம் தேதி தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் முஸ்லிம் மதமாநாடு நடைபெற்றிருக்கிறது. இம்மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 227 பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்கள் அந்த அமைப்பின் மஸ்ஜித் ஆறு மாடிக் கட்டிடத்தில்தான் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே இடத்தில் உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. இதனால், சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது.
இந்த மாநாட்டிற்குச் சென்று திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த 515 பேர் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதே போல், தெலுங்கானாவுக்குத் திரும்பிய 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில்(அலகாபாத்) உள்ள அப்துல்லா மசூதியில் போலீசார் சோதனையிட்டதில் 7 இந்தோனேசியர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களும், கேரளா மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த 2 பேரும் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த 9 பேர் மற்றும் இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த மேலும் 28 பேரைத் தனிமைப்படுத்தித் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று பிரயாக்ராஜ் மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.