கொரானா பரவலுக்கு முஸ்லிம்கள் காரணமா? தெகலான் பாகவி விளக்கம்

what happend in Nizamuddin Tablighi Jamaat conference?

by எஸ். எம். கணபதி, Apr 1, 2020, 14:04 PM IST

வெறுப்பு பிரச்சாரங்களுக்கு ஊக்கம் அளிப்பது போன்று ஒரு சமூகத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழக அரசு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது ஏன்? என்று எஸ்டிபிஐ கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தப்லீக் ஜமாத் என்பது அரசியல் சாராத ஆன்மீக ரீதியான, முஸ்லிம்களிடையே தொழுகையை வலியுறுத்தும் உலகளாவிய ஓர் அமைப்பாகும். கடந்த மார்ச் 22, 23, 24 ஆகிய தேதிகளில் டெல்லி தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தில் தமிழக முஸ்லிம்களுக்காக நடந்த ஒரு கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 700 பேர் பங்கேற்றுள்ளனர்.


மத்திய அரசின் ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து 23ம் தேதி காலையிலேயே அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தமிழகம் திரும்பி உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய தமிழ்நாட்டைச் சார்ந்த மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.இதைக் காரணமாகக் கொண்டு, பிணத்தை வைத்து அரசியல் செய்வதற்குத் தயாராக இருக்கும் சங்க பரிவார அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர்ச்சியான வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய இந்த வெறுப்பு பிரச்சாரத்திற்குத் தூபம் போடுவது போல நேற்று தமிழக அரசும் ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.
தப்லீக் ஜமாத்தின் உலகளாவிய தலைமையகம் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ளது. தினமும் உலகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு ஒன்று கூடுவது வழக்கம். இது அத்தனையும் மாநில மற்றும் மத்திய உளவுத் துறைக்கு முழுமையாகத் தெரியும். அவர்களுக்கு வெளிப்படையாகத் தகவல்கள் அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில்தான், இந்த அமைப்பின் தமிழர்களுக்கான இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இது பற்றிய தகவல்கள் டெல்லி மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தால், அவர்களே கூட்டத்தை ரத்து செய்திருப்பார்கள். இருப்பினும் கூட்டத்தில் பங்கேற்ற சிலருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பங்கேற்ற அனைவரும் சுகாதாரத்துறைக்கும் அரசுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு தப்லீக் ஜமாஅத் டெல்லி தலைமையகத் தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.


இந்த சூழலில், இந்நிகழ்வை காரணம் காட்டி தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் நடைபெறும் வெறுப்பு பிரச்சாரங்களைத் தமிழகக் காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஏன்? வதந்திகளைப் பரப்புகிறார் என்று சொல்லி ஹீலர் பாஸ்கர் போன்றவர்களைக் கைது செய்த தமிழக அரசு, "கொரானா ஜிகாத்" என்று செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகையின் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளும் சங்க பரிவார் அமைப்பின் தலைவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை ?
வெறுப்பு பிரச்சாரங்களுக்கு ஊக்கம் அளிப்பது போன்று ஒரு சமூகத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழக அரசு நேற்று பத்திரிக்கை செய்தி வெளியிட்டது ஏன்? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் ஒரு கூட்டம் நடைபெறுகிறது என்ற செய்தியறிந்தும் அதைத் தடுக்காத மத்திய, மாநில அரசுகள்தானே இதற்குப் பொறுப்பாக முடியும்?

தப்லீக் ஜமாத்தின் பொறுப்பாளர்கள் கவனத்துடன் நடந்து கொண்டிருக்க வேண்டும், இந்த கூட்டத்தை ரத்து செய்திருக்க வேண்டும் என்பதில் ஐயப்பாடு இல்லை.
அதேநேரம் சீனாவில் பெருமளவில் கொரானா தொற்று பரவிக் கொண்டிருந்தபோது அதைப் பற்றிய எந்த கவனமும் இல்லாமல், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்காக இந்தியா விழாக்கோலம் பூண்டிருந்தது என்பதையும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர் என்பதையும், இதே பிப்ரவரியில் தான் CAA சட்டத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய முஸ்லிம்களுக்கு எதிராக டெல்லியில் ஆயிரக்கணக்கில் திரண்டு கொடூரமான வன்முறையை சங்பரிவார அமைப்பின் குண்டர்கள் நிகழ்த்தினார்கள்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு ஜக்கி வாசுதேவ் நடத்திய நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இவற்றையும் இதோடு நாம் இணைத்துப் வேண்டும்.

கொரானா தொற்றுக்கு எதிராக ஜாதி, மதம், அமைப்பு, கட்சி இவற்றைக் கடந்து நாம் களமாடவேண்டிய இந்த தருணத்தில் நம்மைத் திசை திருப்பும் வெறுப்புப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடும் சமூக விரோதிகளை அனைவரும் புறந்தள்ள வேண்டும். காவல்துறை மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்கள் பொறுப்போடு இந்த விஷயத்தைக் கையாள வேண்டும்.

இவ்வாறு தெகலான் பாகவி கூறியுள்ளார்.

You'r reading கொரானா பரவலுக்கு முஸ்லிம்கள் காரணமா? தெகலான் பாகவி விளக்கம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை