கொரோனா நோயை விரட்டுவதில் இந்திய மக்களின் ஒற்றுமையை விளக்கும் வகையில், வரும் 5ம் தேதியன்று இரவு 9 மணிக்கு அனைவரும் விளக்கு ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பாதித்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நோய் தொடர்ந்து பரவாமல் தடுக்க மக்கள், சமூக விலகல்(சோஷியல் டிஸ்டன்ஸ்) கடைப்பிடிப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, பிரதமர் மோடி கடந்த 24ம் தேதியன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, அன்றிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், மக்கள் அவதிப்பட்டனர். எனினும், கொரோனாவை தடுப்பதற்காக அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
இந்நிலையில், இன்று(ஏப்.3) காலை 9 மணிக்குப் பிரதமர் மோடி ஒரு வீடியோ தகவலை அளிப்பதாக நேற்று அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலையில் அவரது பேசும் வீடியோ வெளியானது. அதில் அவர் கூறியதாவது:
கொரோனாவை ஒழிப்பதில் 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கடந்த மார்ச் 22ம் தேதி நாம் நடத்திய மக்கள் ஊரடங்கு, மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக, உந்துகோலாக விளங்கியது. இப்போதும் ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்மில் ஒரு சிலர், நாம் மட்டுமே கொரோனாவை ஒழித்து விட முடியுமா? என்று நினைக்கிறார்கள். அது தவறு. நாம் தனிநபர் அல்ல. 130 கோடி மக்களின் பலம், ஒவ்வொருவருக்கும் உள்ளது. நாம் இணைந்து செயல்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான போரில், நமது ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் வரும் 5ம் தேதியன்று வீடுகளில் விளக்கு ஏற்ற அழைப்பு விடுக்கிறேன். கொரோனா இருளை அகற்றும் வகையில் அன்றிரவு இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு, நான்கு மூலைகளிலும் ஒளியைப் பரப்பும் வகையில் டார்ச், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். செல்போன் பிளாஷ் லைட் வெளிச்சத்தைக் காட்ட வேண்டும். இதை 9 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். அதே சமயம், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். கூட்டமாகச் சேர்ந்து விளக்கு ஏற்றக் கூடாது.
இவ்வாறு மோடி பேசினார். மோடி பேசுகிறார் என்றாலே மக்களுக்கு உதறல் எடுக்கும். பணமதிப்பிழப்பு, ஊரடங்கு அறிவிப்பு போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள்தான் அதற்குக் காரணம். இன்றும் அவர் ஊரடங்கை மே வரை நீட்டித்து விடுவாரோ என்று மக்கள் பயந்திருந்தனர். ஆனால், மோடியின் உரையைக் கேட்ட பிறகு நிம்மதி அடைந்தனர்.