இந்தியா மற்ற நாடுகளுக்கு உதவி செய்யலாம். ஆனால், அதே சமயம் நமது மக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கிறது. இந்த நோய்க்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும், இதற்குத் தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் இந்த மாத்திரைகள் எப்போதும் தயாரிக்கப்பட்டு வருவதால், ஏற்றுமதியும் செய்யப்பட்டு வந்தது. கடந்த 4ம் தேதி இவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, அமெரிக்காவுக்கு மாத்திரை தராவிட்டால், பதிலடி தரப்படும் என்று டிரம்ப் விமர்சித்திருந்தார்.இந்த சூழலில், கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் தருவதாக இந்திய அரசு அறிவித்திருக்கிறது.
இது பற்றி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், பதிலடி என்பதெல்லாம் நட்புக்கு உகந்தது அல்ல. இந்தியா அவசரக் காலத்தில் மற்ற நாடுகளுக்கு உதவி செய்யலாம். ஆனால், அதேசமயம் நமது சொந்த மக்களுக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.