விவசாயிகளுக்கு உதவ அவசர தொலைப்பேசி.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

C.M. announced Emergency Telephone Numbers to help Farmers.

by எஸ். எம். கணபதி, Apr 7, 2020, 14:36 PM IST

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்துச் சென்று விற்பதற்கு உதவுவதற்காக அவசரக்கால தொலைப்பேசி எண்களை முதல்வர் அறிவித்துள்ளார்.கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் நிலத்திலேயே அழிப்பதாகச் செய்திகள் வந்தன.


இதையடுத்து, விவசாயிகளின் விளைபொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்குத் தடை இல்லை என்று ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று(ஏப்.7) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய அவசரக்கால தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைப்பேசி எண்கள் மூலம், வியாபாரிகளைத் தொடர்பு கொள்ளுவது, சரக்கு போக்குவரத்து அனுமதி, குளிர்சாதனக் கிடங்கு சேவை போன்ற உதவிகளைப் பெறலாம்.

தமிழகத்திற்குள் கொண்டு செல்ல, 044-22253884, 22253883, 22253496, 95000 91904 என்ற எண்களைக் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும், காய்கறிகள் மற்றும் பழங்களைக் குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ஏப்.30 வரை வசூலிக்கப்படாது.

மக்களுக்கு நியாயமான விலையில் தரமான காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்கவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.விளைபொருட்களைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், அந்தந்த மாவட்ட வேளாண் துணை இயக்குநரை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

You'r reading விவசாயிகளுக்கு உதவ அவசர தொலைப்பேசி.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை