போபாலில் கொரோனா வார்டில் பணியாற்றிய 2 டாக்டர்கள் உள்பட 70 மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இது வரை 7447 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் இது வரை 370க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருக்கிறது. 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தலைநகர் போபாலில் அதிகபட்சமாக 119 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இவர்களில் 2 டாக்டர் உள்பட 70 மருத்துவப் பணியாளர்கள், கொரோனா வார்டுகளில் பணியாற்றியவர்கள்.
இதனால், கொரோனா வார்டுகளில் பணியாற்றுவோருக்கு போதிய தடுப்பு கவசங்கள், உபகரணங்கள் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, கொரோனா நோயாளிகள் உள்ள மருத்துவமனைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போபாலில் 13 போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.