கர்நாடகாவில் உணவில்லாமல் தவித்த தனது தொகுதியைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார், சரியான நேரத்தில் உதவி செய்திருக்கிறார். அவரது உதவியால் அந்த மக்களுக்கு போதிய அளவு உணவுப் பொருட்கள் கிடைத்துள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை மலை ஊராட்சிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களில், பல குடும்பத்தினர் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குச் சென்று கூலி வேலை செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவுக்குக் கூலி வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் குடும்பத்தினர் பஸ், ரயில் உள்ளிட்ட எந்த போக்குவரத்து வசதியில்லாததால் அங்கேயே தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை அளிக்கும் நிறுவனம் போதிய உதவிகள் எதையும் செய்யவில்லை. வீட்டில் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவையும் தீர்ந்துவிட்டதால் அவர்கள் சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்தனர். இதையடுத்து, அவர்களில் ஒருவர் தங்களுக்கு உதவி கேட்டு வீடியோவில் பேசி அதை வாட்ஸ் அப்பில் அனுப்பினார். இது அவர்களின் சொந்த தொகுதியான அணைக்கட்டு தொகுதியில் வைரலாக பரவியது.
இந்த வாட்ஸ் அப் வீடியோவை பார்த்த அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார், அந்த வீடியோவை பதிவிட்டவரின் செல்போனை பெற்று அதில் தொடர்பு கொண்டு விசாரித்தார். கர்நாடகாவின் சிக்மங்களூர் மாவட்டம், முடுக்கரை சந்திரபுரா எஸ்டேட்டில் அந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் உணவின்றி தவிப்பது தெரிய வந்தது. அவர்களிடம் பேசிய நந்தகுமார், தான் விரைவில் அவர்களுக்கு உணவுப் பொருட்களை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
இதன்பின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் தனிச் செயலாளராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்வகுமாரைத் தொடர்பு கொண்டு பேசினார். அவர் உடனடியாக அந்த தொழிலாளர்கள் தங்கியிருக்கும் எஸ்டேட் பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி விசாரித்தார். பின்னர், அவர்களுக்கு ஒரு மூட்டை அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை போதுமான அளவுக்கு இலவசமாகக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து, அந்த தொழிலாளர்கள் தங்களுக்குத் தகுந்த சமயத்தில் உதவி செய்தமைக்காக நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோவும் அணைக்கட்டு தொகுதியில் வைரலாக பரவியது. இதையடுத்து, பலரும் நந்தகுமார் எம்.எல்.ஏ.வை பாராட்டினர்.