இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய்க்கு 40 பேர் பலியாகியுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது.உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. சமூக தொற்றாக இது மாறாவிட்டாலும், இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு நேற்று வரை 199 பேர் பலியாகியிருந்தனர். 6412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 40 பேர் பலியாகினர். அதனால், கொரோனா பலி எண்ணிக்கை 199ல் இருந்து 239 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று புதிதாக 1035 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7447 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 6565 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 643 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில்தான் இது வரை அதிகபட்சமாக 1666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தில் கொரோனா பலி எண்ணிக்கையும் 92 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் நேற்று மாலை வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்திருக்கிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் இறந்ததை அடுத்து கொரோனா பலி 9 ஆக உயர்ந்துள்ளது.