நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டுமென்று பல மாநில முதல்வர்கள், பிரதமரிடம் வலியுறுத்தினர். உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இது வரை 7447 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 239 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, பிரதமர் மோடி அறிவிப்பின்படி 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, வரும் 14ம் தேதியுடன் முடிகிறது.
இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று டெல்லியிலிருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல்வர்களும் தவறாமல் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கெஜ்ரிவால், அமரீந்தர் சிங் உள்படப் பல மாநில முதல்வர்களும் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். மேலும், தங்கள் மாநிலத்திற்குத் துரித சோதனை கருவிகளை விரைவில் வழங்க வேண்டுமென்றும், விவசாயம் மற்றும் தொழில்துறையினருக்கு அதிக அளவில் நிதியுதவி அளிக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை முதல்வர்கள் தம்மிடம் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு கூறலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.