சென்னையில் தினமும் 11 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் சாப்பிடுகின்றனர் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.இந்தியாவில் தற்போது கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7447 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 6565 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 643 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். இது வரை 239 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழகத்தில் நேற்று மாலை வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையில் பிற மாநிலத் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோருக்கு அம்மா உணவகங்கள்தான் குறைந்த விலையில் உணவு வழங்கி வருகின்றன.
இது தொடர்பாக, சென்னை பெருநகர ஆணையர் பிரகாஷ் இன்று காலையில் நிருபர்களிடம் கூறியதாவது:சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் தினமும் 5 லட்சம் பேர் வரை உணவு சாப்பிட்டு வந்தனர். தற்போது ஊரடங்கால் தினமும் 11 லட்சம் பேருக்கு உணவு வழங்கி வருகிறோம். யாரும் பசியால் வாடக் கூடாது என்பதற்காக மாநில அரசு, அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் உணவு வழங்க உத்தரவிட்டிருக்கிறது. எனவே, உணவு தயாரிப்பதற்காக மளிகைச்சாமான்கள் உள்பட அனைத்தும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு பிரகாஷ் கூறினார்.