இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 414 ஆக அதிகரித்திருக்கிறது.உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்தியாவில் நேற்று வரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக இருந்தது. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 377 ஆக இருந்தது.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்திருக்கிறது. இது வரை 1489 பேர் கொரானாவில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளனர்.தற்போது, அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 2687 பேர், டெல்லியில் 1564 பேர், தமிழ்நாட்டில் 1242, ராஜஸ்தான் 1101 என்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசம், உ.பி., குஜராத் மாநிலங்களிலும் தலா 700 பேர் வரை கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, ஆந்திரா மாநிலங்களில் கொரோனா பரவுவது ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு யாருக்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், நாடு முழுவதும் 170 மாவட்டங்களில் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 22 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சிவப்பு அட்டவணை மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளது. அதே போல், கொரேனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ள மாவட்டங்களாக 207 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.