சீனாவிலிருந்து ஆறரை லட்சம் கொரோனா டெஸ்டிங் கருவிகள் இந்தியாவுக்கு இன்று வந்து சேருகிறது. இதில், தமிழ்நாட்டுக்கு எத்தனை கருவிகள் கிடைக்கும் என தெரியவில்லை.இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,350 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்திருக்கிறது. இது வரை 1489 பேர் கொரானாவில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். இந்தியாவில் தினமும் 50 ஆயிரம் பேருக்குத்தான் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இது வரை 1242 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. தினமும் 2 ஆயிரம் பேருக்குத்தான் ஆர்டி-பிசிஆர் கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே, 30 நிமிடத்திற்குள் பரிசோதனை செய்யும் துரிதப் பரிசோதனை கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) 4 லட்சம் வாங்குவதற்குத் தமிழக அரசு, சீனாவில் உள்ள கம்பெனிகளிடம் ஆர்டர் கொடுத்திருந்தது. ஆனால், இந்தியாவுக்கு வர வேண்டிய முதல் கன்டெய்னரை அமெரிக்கா தட்டிப் பறித்து விட்டது. இதனால், தமிழகத்திற்குக் கடந்த 10ம் தேதி வர வேண்டிய ஒரு லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ் வராமல் போனது.இதற்கிடையே மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. இதன்படி, மாநில அரசுகள் நேரடியாக என்95 முகக் கவசம் கூட வாங்க முடியாது. மத்திய அரசுதான் மொத்தமாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்குத் தரும் எனக் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில், தற்போது சீனாவிலிருந்து ஆறரை லட்சம் பரிசோதனை கருவிகள் இந்தியாவுக்கு இன்று வருகிறது. சீனாவில் குவாங்ஷூ நகரில் உள்ள வோன்ட்போ கம்பெனியில் இருந்து 3 லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ், ஜூஹாய் லிவ்ஜோன் கம்பெனியில் இருந்து இரண்டரை லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ், எம்ஜிஐ ஷென்ஜென் கம்பெனியில் இருந்து 1 லட்சம் ஆர்.என்.ஏ. எக்ஸ்டராக்ஷன் கிட்ஸ் என்று மொத்தம் ஆறரை லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் வருகின்றன.
இவற்றுக்குச் சுங்கச் சோதனைகள் எல்லாம் முடிந்து இன்று காலை வந்து சேரத் தயாராக உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை பெய்ஜிங் மற்றும் குவாங்ஷூ நகரில் உள்ள இந்தியாவின் தூதரகங்கள் செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இந்த ஆறரை லட்சம் கருவிகளில் தமிழகத்திற்கு எத்தனை ஒதுக்கப்படும் எனத் தெரியவில்லை. எத்தனை கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி என்ற நிலைதான் தற்போது உள்ளது. மத்திய அரசிடம் போராடிப் பெறுவதற்கான வலிமையான அரசாகத் தமிழக அரசு உள்ளதா என்பது தான் தெரியவில்லை.