இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. உலக அளவில் 17வது நாடாக இந்தியாவும் இந்த எண்ணிக்கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. மேலும், கொரோனாவால் இந்தியாவில் இது வரை 640 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்தான் அதிகமாகப் பரவியிருக்கிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஏப்.22) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 20,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 3870 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 15,474 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 1493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 5218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 251 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 2178 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 90 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 2156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 47 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 1552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 76 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானில் 1659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 25 பேர் மரணமடைந்துள்ளனர். தெலங்கானாவில் 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 23 பேர் மரணமடைந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 1294 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், அதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இது வரை 1596 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 18 பேர் பலியாகியுள்ளனர்.