மத்தியப் பிரதேசத்தில் பொறுப்பேற்றுள்ள 5 அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டன. அவர்களுடன் முதல்வர் சிவராஜ் சவுகான் ஆலோசனை நடத்தினார்.மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, பாஜக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரை பதவி விலக வைத்து, எண்ணிக்கை விளையாட்டில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சிவராஜ் சவுகான், மார்ச் 23ம் தேதி பதவியேற்றார். மறுநாளே நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அமைச்சர்கள் யாரும் பதவியேற்க முடியவில்லை.
இதன்பின்னர், முதல்வர் சிவராஜ் சவுகான் நேற்று முன் தினம் 5 அமைச்சர்களை நியமித்தார். அதன்படி, பாஜக தலைவர்கள் நரோட்டம் மிஸ்ரா, கமல் படேல், மீனா சிங் ஆகியோரும், காங்கிரசிலிருந்து விலகி வந்த துல்சி சிலாவத், கோவிந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கவர்னர் லால்ஜி டாண்டன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இன்று அந்த புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. இதன்படி, நரோட்டம் மிஸ்ராவுக்கு உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அளிக்கப்பட்டது. கமல் படேலுக்கு விவசாயத் துறையும், துல்சி சிலாவத்துக்கு நீராதார மேலாண்மையும், கோவிந்த் சிங் ராஜ்புத்துக்கு உணவு மற்றும் பதனிடுதல் துறையும், மீனா சிங்கிற்கு பழங்குடியினர் நலன் துறையும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் சிவராஜ் சவுகான் நடத்தி, ஆலோசனை மேற்கொண்டார்.