நாடு முழுவதும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவக் கூடிய இந்த தொற்று நோய் சில மாநிலங்களில் சமூக பரவலாக மாறியிருக்கிறது. குறிப்பாக, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது.
மும்பையில் 57 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் நாளிதழ் நிருபர் ஒருவருக்கும், தொலைக்காட்சியைச் சேர்ந்த 26 பேருக்கும் கொரோனா பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் பத்திரிகையாளர்களை மிகவும் விழிப்புடன் பணியாற்றுமாறும், கவனமாக தங்களைத் தற்காத்துக் கொள்ளுமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், நாடு முழுவதும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருக்கிறது.
டெல்லியில் படேல் நகரில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட மீடியாக்காரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாகப் பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் காலையில் 10 பேர், மாலையில் 10 பேருக்குப் பரிசோதிக்கப்படுகிறது.