டாக்டர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளைச் சேதப்படுத்தினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
சமீபத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து, அதனால் அந்நோய் பாதித்த டாக்டர்கள் சிலர் மரணமடைந்தனர். அவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூட முடியாத சம்பவங்களும் நடந்தன. குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த 2 நாள் முன்பாக உயிரிழந்த டாக்டர் சைமன் உடலை அடக்கம் செய்யக் கொண்டு சென்றவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடைபெற்றது.
இந்த நிலையில், டாக்டர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் ஒரு போராட்டத்தை அறிவித்தது. இதன்படி, இன்று(ஏப்.22) இரவு 9 மணிக்கு டாக்டர்கள் பணியைப் புறக்கணித்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது என்றும், நாளை கருப்பு தினம் கடைப்பிடிப்பது என்றும் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் இன்று காலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்திய மருத்துவர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பான பாதுகாப்பு அளிக்கும் என்று அமித்ஷா உறுதியளித்தார். இதையடுத்து, இந்திய மருத்துவர்கள் சங்கப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த சூழ்நிலையில், இன்று காலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது. எனவே, தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வருவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.
இதன்படி, மருத்துவச் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 மாதம் முதல் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதே போல், கிளினிக்குகளை சேதப்படுத்தினால், அதன் சந்தை மதிப்பைப் போல் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும். இதற்கான அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் உடனடியாக அமலுக்கு வரும்.
இவ்வாறு ஜவடேகர் தெரிவித்தார்.