கேரளாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் சம்பளத்தில் 30 சதவீதம் வீதம் ஓராண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக முதலில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி, மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த ஊரடங்கால் ஏழைத் தொழிலாளர்கள், நடுத்தரமக்கள் வேலை இழந்து வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் உதவிகள் வழங்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு, ஊரடங்கு நிதியுதவி மற்றும் பொருளாதாரச் சரிவு ஆகியவை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டன.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் சம்பளத்தில் ஓராண்டுக்கு 30 சதவீதம் வீதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இதே போல், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்பட சில மாநிலங்களிலும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கேரளாவிலும் இதை முதல்வர் பினராயி விஜயன் செயல்படுத்தியுள்ளார். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் சம்பளத்தில் ஓராண்டுக்கு 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.