மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இது மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கடும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும், எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான 6 மாதங்களுக்கு தர வேண்டிய அகவிலைப்படி உயர்வு(டி.ஏ.), அடுத்து ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு ஆகியவை தரப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.வழக்கமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் போதெல்லாம், அதே உயர்வு மாநில அரசு ஊழியர்களுக்கும் தரப்படும். தற்போது மத்திய அரசு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு இல்லை என்று அறிவித்துள்ளதால், தமிழக அரசும் இதையே பின்பற்றும் எனத் தெரிகிறது. இதனால், தமிழக அரசு ஊழியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.