சீனக் கம்பெனிகளிடம் இருந்து கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்கும் ஆர்டர் ரத்து செய்யப்படுவதாகவும், இதில் ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.கொரோனா வைரஸ் நோயைக் கண்டறிய உதவும் துரித பரிசோதனை கருவிகளை(ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்), சீன கம்பெனிகளிடம் இருந்து வாங்குவதற்குத் தமிழக அரசு ஆர்டர் கொடுத்திருந்தது. அதன்பிறகு, மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், மாநில அரசுகள் நேரடியாக இந்த கருவிகளைச் சீனாவில் இறக்குமதி செய்யக் கூடாது என்றும், மத்திய அரசே கொள்முதல் செய்து தரும் என்று கூறியது.
இதைத் தொடர்ந்து, சீனாவின் குவாங்ஷூ நகரில் உள்ள வோன்ட்போ பயோடெக், ஜூகாய் லிவ்ஜோன் டயாக்னக்டிஸ் ஆகிய 2 கம்பெனிகளிடம் இருந்து 5 லட்சம் ரேபிட் கிட்ஸ் வாங்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐ.சி.எம்.ஆர்) ஆர்டர் கொடுத்தது. ஒரு கருவி ரூ.600 என்ற விலைக்கு வாங்கப்பட்டது. இதில், 2 லட்சத்து 76 ஆயிரம் கருவிகள் சப்ளை செய்யப்பட்டன. இந்த கருவிகளை ராஜஸ்தானில் பயன்படுத்திய போது, அவற்றைக் கொண்டு நடத்திய கொரோனா அறிகுறி பரிசோதனைகள் தவறாக இருந்தன. இதனால், அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டது.
இதற்கிடையே, சட்டீஸ்கர் மாநிலம், தென்கொரிய நிறுவனத்திடம் ரூ.337க்கு தரமான ரேபிட் டெஸ்ட் கருவிகள் 70 ஆயிரம் வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, ரூ.337க்கே தரமான ரேபிட் டெஸ்ட் கருவி கிடைக்கும் போது, ஏன் ரூ.600க்கு தரமற்ற சீனக் கருவிகளை வாங்க வேண்டும்? இதில் ஏதோ ஊழல் நடந்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில், சீனக் கம்பெனிகளிடம் இருந்து அந்த கருவிகளை ஐ.சி.எம்.ஆருக்கு வாங்கித் தருவதில் மேட்ரிக்ஸ் லேப், ரேர் மெடபாலிஸ் லைப் சயின்ஸ் என்ற 2 கம்பெனிகள் இடைத்தரகர்களாகச் செயல்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது, இந்தக் கம்பெனிகளுக்கும், சீனக் கம்பனெிகளுக்கும் இடையே பணபரிமாற்றப் பிரச்னை ஏற்பட்டு, டெல்லி ஐகோர்ட்டுக்கு வழக்கு போனது.
இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்த போது சில உண்மைகள் தெரிய வந்தது. சீனக் கம்பெனிகளின் ரேபிட் டெஸ்ட் கருவி ஒன்றின் விலை ரூ.225 என்றும், அதைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு போக்குவரத்து செலவு ரூ.20 என்றுமாக மொத்தமே ஒரு கருவியின் அடக்க விலை ரூ.245 தான். ஆனால், ஒரு கருவியை ரூ.600க்கு விற்று மீதியைத் தரகு கம்பெனிகள் பெறுகின்றன. அதாவது, மொத்த விலை ரூ.30 கோடியில் ரூ.12.25 கோடிதான் அடக்கவிலை. மீதி 18.75 கோடி ரூபாய் தரகு கம்பெனிகளுக்கு என்று பேசப்பட்டிருக்கிறது. இதை அறிந்த ஐகோர்ட் அதிர்ந்து போனது. ஒரு கருவியைத் தரகர் செலவுடன் சேர்த்து ரூ.400க்கு மேல் வாங்கக் கூடாது என்று ஐ.சி.எம்.ஆருக்கு உத்தரவிட்டது.
இந்த தகவலை அடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தன. மக்கள் கொரோனாவால் அவதியுறும் நேரத்திலும் யாரோ கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் காரசாரமாகத் தாக்கினர்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு விளக்கம் அளித்திருக்கிறது. அதில், சீனக் கம்பெனிகளிடம் அட்வான்ஸ் எதுவும் தரவில்லை. அந்த கம்பெனிகளின் ஆர்டர் முழுமையாக ரத்து செய்யப்படும். எனவே, மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.இதற்கு முன்பும், ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு என்பது உள்பட பல்வேறு சமயங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் வந்த போதும், மத்திய அரசு சமாளிப்பு விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.