வெளிமாநிலங்களுக்குச் சரக்குகளைக் கொண்டு செல்லும் லாரிகளை தடுக்காமல் அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசு பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அதில் ஒன்றாக, மாநிலங்களுக்கு இடையே அத்தியாவசியப் பொருட்கள் சப்ளையை அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.ஆனால், பல மாநிலங்களின் எல்லைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் சரக்கு லாரிகளை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது பற்றி, மத்திய அரசுக்குப் புகார்கள் சென்றன.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய்பல்லா, மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், மாநிலங்களுக்கு இடையே சரக்கு லாரிகளை அனுமதிக்க வேண்டுமென்று ஏற்கனவே உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. எனவே, 2 டிரைவர்கள் மற்றும் ஒரு உதவியாளருடன் லாரிகளை அனுமதிக்க வேண்டும். அவர்களிடம் அனுமதிக் கடிதம் கேட்டுத் தடுக்கக் கூடாது. லாரிகளில் சரக்கு இருந்தாலும், காலியாக இருந்தாலும் அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.