மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சட்டமேலவை உறுப்பினராகும் வகையில் 9 காலியிடங்களுக்கான தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்துத் தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்கிறது.
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்ததை அடுத்து, அங்கு சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாததால், தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லை. முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்ற 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராகவோ, சட்டமேலவை உறுப்பினராகவோ பொறுப்பேற்க வேண்டும். அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.
இதன்படி, மே 27ம் தேதிக்குள் முதல்வர் உத்தவ் தாக்கரே, எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி ஆகத் தேர்வாக வேண்டும். தற்போது கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை நியமித்து மாநில அமைச்சரவை முடிவு செய்தது. இதை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு அனுப்பியது. ஆனால், கவர்னர் அதற்கு அனுமதி அளிக்காமல் 2 நாட்களாகக் கிடப்பில் போட்டிருந்தார்.
இது பற்றி, பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் உத்தவ் தாக்கரே பேசினார். அவர் கவர்னரிடம் விளக்கம் கேட்டு முடிவெடுப்பதாகக் கூறியிருந்தார். இந்த சூழலில், கவர்னர் கோஷ்யாரி, தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பலவும் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே, மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 9 சட்டமேலவை உறுப்பினர்(எம்.எல்.சி) இடங்களுக்குத் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். அதன்மூலம், சட்டசபை அல்லது சட்டமேலவைக்கு உறுப்பினராகும் சட்டப் பிரச்சனைக்கு முடிவு ஏற்படும் என்று கூறியிருக்கிறார்.
கவர்னரின் பரிந்துரையை ஏற்று, மகாராஷ்டிராவில் சட்ட மேலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்துவது குறித்துத் தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்க உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர், இதர தேர்தல் ஆணையர்கள் மற்றும் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியும் வீடியோ கான்பரன்சில் ஆலோசித்த பின், தேர்தலை அறிவிப்பார் என்று தெரிகிறது.இதற்கிடையே, மும்பையில் முதல்வர் உத்தவ் தாக்கரே, ராஜ்பவனுக்கு சென்று கவர்னர் கோஷ்யாரியுடன் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினார். இன்று மகாராஷ்டிர தினம் என்பதால், மரியாதை நிமித்தமாக கவர்னரை முதல்வர் சந்தித்ததாகக் கூறப்பட்டது.